01

குதிரை கொம்பு

பெண் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாய் அல்லவா இருக்கிறது .

அதுவும் பிரபு போன்றவர்களுக்கு வேலையே கதி என்று கிடப்பவர்களுக்கு சொல்லவா வேண்டும்.

பிரபுவின் அப்பாவும் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை.ஏன் பிரபுவின் அம்மா கல்யாணம்  ஆனால் தனக்கே மொட்டை போடுவதாய் கூட வேண்டிக் கொண்டாளே

அப்புறம் சும்மாவா இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு தவமாய் இருந்து ஒரே பிள்ளையாய் கறிவேப்பிலையாய் பெற்ற பிள்ளையாயிற்றே.அது என்ன கறிவேப்பிலை எனக்கு புரியவில்லையே சரி அத விடுங்க அதுவா முக்கியம் இங்கே.கதைக்கு வருவோம்.

பிரபுவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்பிரபுவுக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலையை விடவும் இன்று பிரபுவுக்காக நகரத்திற்கு வந்திருக்கிறார்களே தவிர அன்று அவர்கள் வாழ்ந்த பூஞ்சோலை கிராமத்திற்கு போகமுடியவில்லையே என்பது தான் பெரிய வருத்தமாக இருந்தது.

ஆமாம் அந்த பூக்கள் கூத்துக்குலுங்கும் பூஞ்சோலையில் வாயில் போட்டால் கொண்டா கொண்டா  என்று கேட்க தூண்டும் மாங்கனிகளை தரும் பூஞ்சோலையில் வற்றாத ஆறோடும் பூஞ்சோலை கிராமத்தில் அவர்கள் நுழைந்தாலே அக்கம் பக்கம் இருந்தவர்கள் இருப்பவர்கள் அனைவரும் கேட்டுத் துளைப்பார்களே

என்ன பையனுக்கு கல்யாணம் ஆகிடுத்தா கல்யாணம் ஆகிடுத்தா என்று பிய்த்து எடுப்பார்களே ஏதோ யாருக்குமே சொல்லாமலா  கல்யாணம் பண்ணியா விடப்போகிறோம் என நினைக்கும் போது பிரபுவின் அப்பாவுக்கு கோபமாய் வரும்.

அதை நினைத்தே பிரபுவுடன் நகரத்திற்கு வந்ததிற்கு பிறகு குல தெய்வ வழிபாட்டுக் கூட அந்த அழகிய பூஞ்சோலை கிராமத்திற்கு வருவதை கூட போன வருடம் தவிர்த்திருக்கிறார்களே.இத்தனைக்கும் பெண் இரண்டையும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து விட்டார்கள்.

ஆனால் பிரபுவுக்கு கல்யாணத்தில் அவ்வளவு இஷ்டமில்லை.இருந்தாலும் அம்மா அப்பா சொல்கிறார்களே என்று ஒத்துக்கொண்டான்.ஆனால் அதற்கான ஏற்பாடுகளிலெல்லாம் பெரிதாக கலந்து கொள்ளவில்லை.

பிரபுவின் அப்பா பிரபு ஒத்துக்கொண்டதே போதுமென்று அவன் பிறந்த தேதியை வைத்து ஜோசியரை தேடிப்போய்  ஜாதகம் குறித்து வாங்கினார்.

அம்மா சும்மா இல்லாமல் ஏதோ தன் வீட்டுக்காரன் பெரிய சாதனை செய்து விட்டது போல தன் அண்ணனிடம் ஙகாட்டினாள்.

அவர் சும்மா இல்லாமல் ஏதோ தனக்கு தெரிந்திருந்த அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு  7 ஆம் இடத்தில் இருக்க வேண்டிய சுக்கிரன் ஏதோ இடத்தில் இருக்கிறது.

அதனால் ஒன்பது நவகிரக கோயிலையும் ஒரு முறை பார்த்து வரவேண்டும் என்றார்.அப்பத்தான் கல்யாணம் நடக்கும் என்றார்.

அப்பா கூட அதை பெரிதாக கண்டு கொள்ளவில்வை ஆனால் அம்மா விடவில்லை என்ன இருந்தாலும் கூடப்பிறந்த அண்ணன் சொல்லியிருக்கிறானே விடுவாளா அடம்பிடித்தாள் போய் வந்தார்கள்.

 பிரபு  பெரியகம்பெனியில் பொதுமேலாளராய் இருந்தான்.

அதனால் அதற்கேற்றபடி பெண் பார்க்க வேண்டியிருந்தது.பிரபுவின் அப்பாவும் ஜாதகத்தை எடுத்து ஒவ்வொரு கோயில்படியாய் ஏறி இறங்கினார்.

அலைபேசியை எடுத்து ஒன்றிரண்டு இடங்களில் பேசினார்.எடுத்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி

என் பெண் பெரிய இடத்தில் வேலை பார்க்கிறாள்.பெண் இரண்டு என்று  போட்டிருக்கிறீர்கள் எல்லாம் செட்டில்டு தானே ஒன்னும் பிரச்சனை ஏதும் இல்லையே வருடத்திற்கு ஒரு முறையெல்லாம் கல்யாணம் ஆன பிறகு வீட்டிற்கெல்லாம் வரக்கூடாது.

எப்பவாவது விஷேஷம் இருந்தால் ஒன்றிரண்டு நாள் வரலாம் என்றனர்.பிரபுவின் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை உங்கள் பொண்ணோட ஜாதகத்தை அனுப்புங்கோ என்பார்.

அவர்களும் ஏதோ அவர்களின் தங்கச்சுரங்கத்திற்கு வழி காட்டி அனுப்புவது போல பெண்ணின் ஜாதகத்தை அனுப்புவார்கள்.ரெண்டு மூன்று தடவை கேட்டபிறகு அனுப்புவார்கள்

இப்படி வந்ததில் இரண்டு ஜாதகங்கள் அம்மாவுக்கும் அம்மாவின் அண்ணனுக்கும் பிடித்து போக ஜாதகமும் ஒத்துப்போக அப்பா அவர்களோடு பேசினார்.

அதில் ஒரு வீட்டில் அந்த பெண்ணின் அம்மா தான் அலைபேசியை எடுத்தவுடனே சொல்லி விட்டார்.

இந்தப்பாருங்க நாங்கள் முதல்லய சொன்ன மாதிரி தான் மாப்பிள்ளை கல்யாணம் ஆனவுடனேயே அந்த பெரியகம்பெனியின் காரை வாங்கிவிட வேண்டும்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாட்டிற்கு கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

அது என்னவோ இன்னொரு வீட்டில் சொல்லியிருந்த கூடப்பிறந்தவர்கள் வரவே கூடாது மற்றும் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போய்விட வேண்டும்.வாடையே ஆகாது.

பெண் ஒரு நாள் சமைத்தால் பையன் ஒரு நாள் சமைக்க வேண்டும் போன்றவை கொஞ்சம் எளிதாக இருக்கவே அதற்கு ஒகே சொன்னார்கள்.

கல்யாணம் மண்டபத்திலெல்லாம்இல்லை அந்த ஊரிலேயே பெரிய ஹோட்டலில் நடந்தது

கல்யாணமும் நல்லபடியாய் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணையும் வீட்டில் கொண்டு விட்டு விட்டு பிரபுவின் அம்மாவும் அப்பாவும் அவர்களுக்காக பார்த்து வைத்திருந்த அந்த வாடகை வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஒரு ஆறுமாதம் கழிந்திருக்கும் பிரபு ரொம்ப அயர்வாய் அவனது அப்பா வீட்டிற்கு வந்தான்.

பிரபுவின் அப்பா பிரபுவிடம் என்னப்பா இந்தப்பக்கம் என்றார்.

இல்லப்பா நம்ம குடும்ப வக்கீல பார்க்கலாம்னு வந்தேன்பா என்றான் பிரபு

என்னப்பா என்ன சொல்ற என்றார்.இல்லப்பா எங்க இரண்டு பேருக்கும் ஒத்துப்போகவில்லை.

அவள் தான் முதலில் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்திருக்கா அதற்குத் தான் பதில் நோட்டீஸ் கொடுப்பதற்காக என்றான் ரொம்பவே சாதரணமாக ஏதோ அவன் அலுவலகத்திற்கு வருமான வரி அலுவலகத்திலிருந்த வந்திருந்த நோட்டீஸிற்கு பதில் கொடுக்க வந்தவனை போல.

பிரபுவின் அப்பா தலையை கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

Story Completed

You've reached the end of this journey.

1Chapters Read

Write a comment ...

Write a comment ...

Padmanabhan

அன்பான தமிழ்சொந்தங்களே பத்மநாபன் என்ற நான் விருதுநகர் என்ற நகரை சேர்ந்தவன்.எனக்கு.சிறு வயது முதலே கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.நான் பல கதைகள் எழுதியிருந்தாலும் இத்தளத்தில் இது தான் எனது முதல்தொகுப்பாகும்.படித்து உங்கள் கருத்தை சொல்லி ஊக்கப்படுத்துங்களேன்