விவகாரம்

பிரபுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.இந்த கதைக்கு இவ்வளவு வரவேற்பு வரும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.

பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன் அங்கிருக்கும் அந்த மாஞ்சோலையிலும் தேனினும் இனிய தண்ணீர் தரும் தென்னந்தோப்பிலும் இளங்கன்னிகள் மீன் குஞ்சுகளோடு  நீந்தி விளையாடும் தெளிவான ஆற்றங்கரையை சுற்றியே வாழ்ந்ததால் அவன் ரசனை மிக்கவனாய் இருந்தான்.எதிலும் ரசனை எங்கும் ரசனை வாழ்க்கையே ரசனை என்றிருந்தான்.

அவன் தந்தை அங்கிருந்த அரசாங்க பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தார்.பிரபுவையும் தமிழ் வழிக்கல்வியிலேயே சேர்த்தார்.அதற்கு மேல் அவருக்கும் வேறு வழியில்லை

பிரபுவுக்கு மற்ற பாடங்களை விட தமிழ் மீது ஆர்வம் பெருகியது.சிறுவயது முதலே தமிழிலே கதைகளையும் கவிதைகளையும் புனைந்து தள்ளினான்.

அவன் தள்ளினான் ஆனால் அவன் கதைகளையும் கவிதைகளையும் யாரும் பிரசுரிக்கவில்லை தள்ளித்தான் போட்டார்கள். ஆனாலும் மனம் நோ கவில்லை.

சிறுவயதில் சிறு கதை குறுங்கதை என்று எழுத ஆரம்பித்தான் அப்போழுதெல்லாம் அவன் எழுதினால் பத்திரிக்கைக்கு தான் அனுப்பவேண்டும் அதிலும் பல பத்திரிக்கைகள் பார்ப்பார்களா மாட்டார்களா என கூட தெரியாது

அப்படியே திரும்பி அனுப்பிவிடுவார்கள் அப்போழுதெல்லாம் பிரபுவுக்கு மனது வலிக்கும்.பள்ளிக்கூட பரிட்சைக்கு கூட அவ்வளவு அழுததில்லை யாருக்கும் தெரியாமல் தான் அழுவான் ஆமாம் யாருக்கும் தெரிந்தால் தான் கை கொட்டி சிரிப்பார்களே.

ஆமாம் இந்த சமுதாயத்திற்கே அவர்களை தவிர மற்ற யாரும் கொஞ்சம் வித்தியாசமாக செய்தால் கூட அது அவர்களுக்கு கிறுக்குத்தனமாகத்தான் தெரியும்.விழுந்து விழுந்து தான் சிரிக்கும் எனபிரபு கூட பல சமயம் நினைத்துக்கொள்வான்.

ஆனால் இப்போழுது தான் உலகமே அவன் கைக்குள் வந்துவிட்டதே இன்று தான் அவன் நினைத்தால் அவனது முக நூலில் அவனுக்கென்று இருக்கும் பக்கத்தில் எழுதிவிடுகிறானே.

 ஆனாலும் இப்போழுதும் என்ன எழுதத்தான் செய்கிறான்.எவ்வளவோ எழுதுகிறான்.சீண்டத்தான் ஆளில்லை ஒரு பதிவுக்கு ஒரு விருப்பம் என்றாலே பெரிய விஷயம் அதில்  வர்ணணைகளை எல்லாம் அவன் எதிர்பார்க்கவே முடியாது.

இப்படியே  இருக்கும் போது தான்  ஒரு நாவலை எழுத ஆரம்பித்தான்.அது ஒரு உண்மைக்கதை என்றான்.

கதையின் ஆரம்பித்திலேயே கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் பெரிய சண்டை வந்தது கதாநாயகன் கதாநாயகியை பளார் என்று அறைந்தான் என்று எழுதினான்  உடனே தான் வந்தது அவனுக்கு முதல் விருப்பம்.அடுத்தடுத்து எழுதினான் அவள் அவன் வீட்டை திட்டுவது போலவும் அவன் அவள் வீட்டை திட்டுவது போலவும் எழுதினான்.வந்து குவிந்தது வர்ணணைகள்.இதுவரை அவன் பார்க்காத வர்ணணை.

ஏன் ஒருவருக்கொருவர் அதானே பெண் என்றால் அடங்கித்தான் போக வேண்டுமா ஆண் என்றாலே விட்டுக்கொடுத்து தான் போக வேண்டுமா என்று முகமே தெரியாத பலர் அந்த முகநூல் பக்கத்தில் சண்டை போட்டுக்கொண்டனர்.

பிரபுவும் இப்படியே எழுதி ஒரு வருடத்திற்கு கதையை கொண்டுவந்துவிட்டான்.இப்போழுது கதாநாயகனும் கதாநாயகியும் கோர்ட்வரை சென்றுவிட்டனர்.

இப்போழுது அங்கிருந்த அவனுக்கு தெரிந்த வக்கீல் கதாநாயகனை  தனது வீட்டிற்கு அழைக்கிறாள்.

வீட்டிற்கு சென்றால் அங்கு ஒரு ஆண்மகன் கதவை திறக்கிறான் அந்த பெண் வக்கீலை பார்த்து அவளுடன் கதாநாயகன் நிற்பதை பார்த்து வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறார்.

சிறுது நேரம் கழித்து அந்த வீட்டின் சிறிய அறையிலிருந்து ஒரு சின்ன பெண்ணிண் முனகல் சத்தம் கேட்கிறது.

என்னவென்று கதாநாயகன் வக்கீலிடம் கேட்கிறான்.அவள் அவனிடம் இவள் வேறு யாருமில்லை எனது மகள் தான் சிறு வயதில் ஒரு விபத்தில் அடிபட்டு இப்படி ஆகிவிட்டாள்.

அதற்கு பிறகு அவளை யார் பார்த்துக்கொள்வது என வந்த போது என் கணவர் தான் அதான் இப்போழுது பார்த்தீர்களே அவர் தான் நான் பார்த்துக்கொள்கிறேன் என எனக்காக என் தொழிலுக்காக விட்டுக்கொடுத்தார்.இன்று வரை எங்கள் வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்றாள்.கதாநாயகனுக்கு சட்டென்று உரைத்தது

 கதாநாயகன் தனது தவறை உணர்ந்து கதாநாயகியுடன் சேர்ந்தான என்று கதையை முடித்திருந்தான்

இப்படி முடித்திருந்த கதைக்கு தான் அவ்வளவு பாராட்டுகளும் வர்ணணைகளும் வந்திருந்தது.

ஏன் முகநூலில் இருந்து பிரேக்அவுட் போஸ்ட் என்ற ஒரு அவார்ட் கூட அவனுக்கு கிடைத்தது.பிரபுவுக்கு சந்தோஷமாகிவிட்டது.

அந்த நேரம் பார்த்து அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்கவே கதவை திறந்தான் வெளியே அவனுக்கு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் ஒன்று வந்திருந்தது.

அதை அவசரம் அவசரமாக திறந்து பார்த்தான் அதிர்ச்சியடைந்தான்.ஆமாம் அவனது மனைவியிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது

பிரபுவுக்கு இப்போழுது தான் ஞாபகம் வந்தது.பிரபு இப்படி கதை கதை என்று போக்கில் எப்போழுதும் முக நூலில் இருக்க பிரபுவின் மனைவி அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவள் அப்பா வீட்டிற்கு சென்றது.



Write a comment ...

Write a comment ...

Padmanabhan

அன்பான தமிழ்சொந்தங்களே பத்மநாபன் என்ற நான் விருதுநகர் என்ற நகரை சேர்ந்தவன்.எனக்கு.சிறு வயது முதலே கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.நான் பல கதைகள் எழுதியிருந்தாலும் இத்தளத்தில் இது தான் எனது முதல்தொகுப்பாகும்.படித்து உங்கள் கருத்தை சொல்லி ஊக்கப்படுத்துங்களேன்